Advertisment

மேகதாது அணை பிரச்சனை! புதுச்சேரி அமைச்சரை சந்தித்த ரவிக்குமார் எம்.பி! 

mekedatu dam problem! Ravikumar MP meets Puducherry Minister

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய அரசின் நீர்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஷெகாவத்தும் உறுதியளித்திருக்கிறார். இருப்பினும் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்த முதல்வர் ஸ்டாலின், 3 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், தமிழ்நாடு அரசைப் போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து வலியுறுத்தியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் எம்.பி.யுமான ரவிக்குமார்.

Advertisment

அந்த சந்திப்பின்போது, காவிரி பிரச்சனைகள் பற்றி விரிவாக எழுதப்பட்ட கடிதத்தையும் அமைச்சரிடம் தந்துள்ளார் ரவிக்குமார். அந்தக் கடிதத்தில், "புதுச்சேரி மாநிலத்தின் பிரத்தியேகமான புவியியல் சூழல், தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத்தவிர வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது. புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது. இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவ மழையைத்தான் நம்பியுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.

காவிரிப் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நம்பியார், புதுச்சேரிக்கு 9 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என வாதாடினார். ஆனால் நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டி.எம்.சி. தண்ணீரைத்தான் உச்சநீதிமன்றமும் ஒதுக்கியது. நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதிசெய்தது.

புதுச்சேரியின் பிரத்தியேகமான புவியியல் நிலையைக் கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடி செய்வதற்கான உரிமையை உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட 7 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேகதாது அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர 12.07.2021 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். எனவே சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காவிரிநீர் உரிமையை நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ரவிக்குமார்.

அவரிடமிருந்து கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் லஷ்மிநாராயணன், முதல்வரிடம் இது குறித்து கலந்தாலோசிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

megathathu ravikumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe