/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sunilraghun.jpg)
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் என்ற இளம் தம்பதி கடந்த மே மாதம் 22ஆம் தேதி மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது திடீரென்று காணாமல் போனார்கள். பல நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மனைவி சோனமை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் தான் தனது கணவரை கூலிப்படைகளை வைத்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
வேறு ஒரு நபரை காதலித்து வந்த சோனமுக்கு, ராஜா ரகுவன்ஷியோடு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, கணவர் ராஜா ரகுவன்ஷியுடன் மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது அவரை கூலிப்படைகளை வைத்து கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து சோனம், அவருடைய காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படைகள் மூன்று பேர் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனிலவு சென்ற போது கணவரை கூலிப்படைகளை வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகி வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, மனைவி அவரது காதலனுடன் சென்றபோதும் கூட ராஜா ரகுவன்ஷி மாதிரி கொலை செய்யப்படவில்லை என்று நபர் ஒருவர் பெருமூச்சு விட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுனில். இவருக்கு குஷ்பு என்ற பெண்ணுடன் கடந்த மே 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 9 நாட்கள் தனது கணவர் வீட்டில் தங்கியிருந்த குஷ்பு, திருமண சடங்கின் ஒரு பகுதியாக தனது சொந்த வீட்டிற்குச் சென்றார். அங்குச் சென்ற அவர், ஏற்கெனவே தான் காதலித்து வந்த காதலனோடு சென்றுள்ளார். இதற்கிடையில், தனது மனைவி காணாமல் போனதாக சுனில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், குஷ்புவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், குஷ்பு தனது காதலனோடு நேற்று காவல் நிலையத்திற்கு வந்து தான் காதலனோடு சென்றுவிட்டதாகவும், இனிமேல் அவருடன் தான் வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட சுனில், மனைவியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அவரை செல்ல அனுமதித்துள்ளார். இதனால், இந்த விவகாரம் காவல் நிலையத்தில் சுமுகமாக தீர்க்கப்பட்டது. குஷ்புவும், சுனிலும் பரஸ்பர தீர்வுக்கு ஒப்புக்கொண்ட பின்பு, திருமணத்தின் போது குஷ்புவுக்கு வழங்கப்பட்ட நகைகள் மற்றும் பிற பொருட்களை சுனில் தரப்பினர் திருப்பித் தந்தனர். மேலும், இரு தரப்பினரும் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஷ்பு தனது காதலனோடு காவல் நிலையத்தில் இருந்து வெளியேற, சுனில் தரப்பினரும் தங்களது வீட்டிற்குச் சென்றனர்.
இது குறித்து சுனில் கூறியதாவது, ‘மனைவி சென்ற பிறகு, தேனிலவுக்காகநைனிடாலுக்கு அவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவர் தனது காதலனோடு இருக்க விரும்பியுள்ளார். நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நல்ல வேளையாக நான் இன்னொரு ராஜா ரகுவன்ஷி ஆகவில்லை. இப்போது நாங்கள் மூன்று பேரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் மனைவி அவருடைய காதலனும் காதலை கண்டுபிடித்துவிட்டார்கள், என் வாழ்க்கை அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது’ என்று கூறி பெருமூச்சு விட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)