Advertisment

"காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது" - புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்!

publive-image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் 13-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணைக் கட்டுமான விவாதத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என முதலமைச்சர் ரங்கசாமி தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசுகையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கர்நாடகாவில் சுமார் 67 டி.எம்.சி காவிரி தண்ணீரைச் சேமிக்க முடியும். இதனால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் டெல்டா பகுதிக்கு வழங்கப்பட வேண்டிய 7 டி.எம்.சி காவிரி நீர் முழுமையாகக் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் காவிரியின் கடைமடை நீர்ப் பாசனப் பகுதிகளான தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரவேண்டிய நீரில் பற்றாக்குறை ஏற்பட்டு காரைக்கால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிப்புக்குள்ளாகி நெல் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கும்.

Advertisment

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரியில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசு மூலம் உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ள போது அது நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டதாகும். எனவே இன்று (31-ஆம் தேதி) நடைபெற உள்ள 13-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணைக் கட்டுமான விவாதம் எடுத்துக் கொள்ளக்கூடாது என ஒருமனதாகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறேன்" என்றார்.

முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ நாஜிம், "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் புதுச்சேரி அரசும் ஒரு மனுதாரராகச் சேர வேண்டும்" என்றார். அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் பதிலளித்துப் பேசுகையில், "தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் நாமும் ஒரு மனுதாரராகத் தாமாகவே சேர்க்கப்பட்டுள்ளதால் வழக்கு தொடர வேண்டியதில்லை" எனப் பதிலளித்தார்.

சுயேச்சை எம்.எல்.ஏ பி.ஆர்.சிவா பேசும்போது, "சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதையும் தாண்டி இங்குள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்களும் டெல்லி சென்று, இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாடு புதுச்சேரி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தெளிவான முடிவு எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்" என்றார். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், “மேகதாது அணை கட்ட கூடாது என்பதில் புதுச்சேரி பா.ஜ.க தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறது" என்றார். இறுதியாக சபாநாயகர் செல்வம் இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்புக்கு விடுத்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Mekedatu Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe