Advertisment

மத்திய அமைச்சருடன் சந்திப்பு; மல்யுத்த வீரர்கள் வைத்த 3 கோரிக்கைகள்

Meeting with Union Minister; 3 demands made by wrestlers

Advertisment

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். இதையடுத்து மல்யுத்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகின. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சந்தித்து பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பஜ்ரங் பூனியா, அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து வெளியே பேசக்கூடாது என தங்களிடம் தெரிவித்துவிட்டு அரசு தரப்பிலேயே தகவல் கசியவிடப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். தாங்கள் பணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியானதாகவும் அவர் குறிப்பிட்டார். புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்ததாகவும் பஜ்ரங் பூனியா தெரிவித்தார். இதனிடையே பிரிஜ்பூஷணிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியானது. வழக்கு தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த பதிவை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இல்லத்திற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வருகை புரிந்துள்ளார். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் அறிவித்திருந்தார். இந்நிலையில் பஜ்ரங் பூனியா மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா உடன் சாக்‌ஷி மாலிக், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத்தும் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் போது 3 கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைக்க இருப்பதாகத்தெரிகிறது.

முதலில் பிரிஜ்பூஷண் சிங்கினை கைது செய்ய வேண்டும் என்றும் இரண்டாவது விளையாட்டுத்துறையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து தூய்மைப்படுத்த வேண்டும். மூன்றாவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படும்போது அதை நிவர்த்தி செய்யவும் பிரச்சனையை முடித்து வைக்கவும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், நாளை மறுநாளுடன் விவசாய சங்கங்கள் கொடுத்த கெடுவும் முடிவுக்கு வருகிறது. அதற்குள் பிரிஜ்பூஷண் சிங் கைது செய்யப்படவில்லை என்றால் டில்லியை முற்றுகையிடுவோம் என மல்யுத்த வீரர்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

wrestlers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe