Skip to main content

மத்திய அமைச்சருடன் சந்திப்பு; மல்யுத்த வீரர்கள் வைத்த 3 கோரிக்கைகள்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Meeting with Union Minister; 3 demands made by wrestlers

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி  பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். இதையடுத்து மல்யுத்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகின. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சந்தித்து பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பஜ்ரங் பூனியா, அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து வெளியே பேசக்கூடாது என தங்களிடம் தெரிவித்துவிட்டு அரசு தரப்பிலேயே தகவல் கசியவிடப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். தாங்கள் பணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியானதாகவும் அவர் குறிப்பிட்டார். புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்ததாகவும் பஜ்ரங் பூனியா தெரிவித்தார். இதனிடையே பிரிஜ்பூஷணிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியானது. வழக்கு தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த பதிவை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இல்லத்திற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வருகை புரிந்துள்ளார். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் அறிவித்திருந்தார். இந்நிலையில் பஜ்ரங் பூனியா மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா உடன் சாக்‌ஷி மாலிக், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத்தும் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் போது 3 கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைக்க இருப்பதாகத் தெரிகிறது.

 

முதலில் பிரிஜ்பூஷண் சிங்கினை கைது செய்ய வேண்டும் என்றும் இரண்டாவது விளையாட்டுத்துறையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து தூய்மைப்படுத்த வேண்டும். மூன்றாவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படும்போது அதை நிவர்த்தி செய்யவும் பிரச்சனையை முடித்து வைக்கவும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், நாளை மறுநாளுடன் விவசாய சங்கங்கள் கொடுத்த கெடுவும் முடிவுக்கு வருகிறது. அதற்குள் பிரிஜ்பூஷண் சிங் கைது செய்யப்படவில்லை என்றால் டில்லியை முற்றுகையிடுவோம் என மல்யுத்த வீரர்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Central Minister Anurag Thakur  says BJP is seeing a lot of growth in Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் வலுவான தலைமையை விரும்புகிறார்கள், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் தலைமையில் நாடு எப்படி முன்னேறி உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. இப்போது, ​​மக்கள் அதன் தொடர்ச்சியை காண விரும்புகிறார்கள். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தமிழகத்தில் மாற்றத்தின் கடலைப் பார்க்க முடிந்தது. பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வை மக்கள் நம்பிக்கை கதிராகப் பார்க்கிறார்கள். இந்த முறை தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளைப் பெறப் போகிறது என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார். 

Next Story

“பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சிங் எனது குடும்பத்தை குறி வைக்கிறார்” - சாக்‌ஷி மாலிக் பரபரப்பு புகார்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Sakshi Malik sensational complaint on Brij bhushan Singh is targeting my family

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

கடந்த கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளைத் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டுச் சென்றார். 

இதற்கிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் - வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சாக்‌ஷி மாலிக், “எங்களுக்கு சஞ்சய் சிங் மட்டும் தான் பிரச்சனை. அவரைத் தவிர புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளில் சஞ்சய் சிங் தலையிடாதவாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உறுதி செய்ய வேண்டும். பா.ஜ.க. எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் எனது குடும்பத்தை குறிவைக்கிறார். அவரால் எனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று கூறினார்.