medical colleges in Puducherry;dmk case

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்,அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தக்கோரி, புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமனறத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கோரி தி.மு.க., அதி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Advertisment

இதேபோல, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்,மருத்துவ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும்போது, மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனஅம்மாநில தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி உட்பட எட்டு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவக் கல்லூரி உட்பட நான்கு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், பட்டியலினத்தவர்களுக்கு 16 சதவீதம், பழங்குடியினத்தவர்களுக்கு 0.5 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 11 சதவீதம், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 2 சதவீதம், கடைக்கோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 0.5 சதவீதம் என, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த இடஒதுக்கீட்டு முறையை, புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு அமல்படுத்த மறுப்பது என்பது, சமூகநீதி மறுக்கப்படுவதற்கு சமம் எனவும், சட்ட அந்தஸ்து பெற்ற புதுச்சேரி இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்தாமல், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.