ADVERTISEMENT

"சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டும்" - உ.பி அரசுக்கு மாயாவதி கோரிக்கை

04:34 PM Jan 09, 2024 | mathi23

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்கட்சிகளான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு கட்சிகள் இடையே சாதிய ரீதியிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தன் கட்சி அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற உதவ வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு மாயாவதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சமாஜ்வாதி கட்சி பிற்படுத்தப்பட்டோருக்கான கட்சி மட்டுமல்ல, தலித் மக்களுக்கு எதிரான கட்சியும் கூட. கடந்த பொதுத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த போது, சமாஜ்வாதி கட்சியின் தலித் விரோத உத்திகள் மற்றும் குணத்தை பகுஜன் சமாஜ் கட்சி மாற்ற முயற்சித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, சமாஜ்வாதி கட்சி மீண்டும் தனது தலித் விரோத உத்தியை கொண்டு வந்தது.

ADVERTISEMENT

இப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் யாருடன் கூட்டணி பற்றி பேசினாலும், அவரது முதல் நிபந்தனை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது, எங்கள் கட்சி அலுவலகத்தின் மீதும், எனது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர். தண்ணீர், மின்சாரம் போன்றவையும் துண்டிக்கப்பட்டன.

பகுஜன் சமாஜ் மாநில அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கு சில தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. இந்த பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஆலோசனைகளின் பேரில், கட்சித் தலைவர்கள் இப்போது பெரும்பாலான கட்சிக் கூட்டங்களை அவர்களது இல்லத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் பெரிய கூட்டங்களில், கட்சித் தலைவர்கள் அங்கு சென்றதும், பாதுகாப்புப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில், தற்போதைய கட்சியின் மாநில அலுவலகத்திற்கு பதிலாக வேறு எங்காவது பாதுகாப்பான இடத்தில் ஏற்பாடுகளை செய்யுமாறும், இல்லையெனில் எந்த நேரத்திலும் இங்கு அசம்பாவிதம் நிகழலாம் என்றும் உ.பி. அரசுக்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சி சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், தலித் விரோதப் போக்கை அரசு கடுமையாகக் கையாள வேண்டும் என்றும் கட்சி கோருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT