மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 4 ஆம் தேதி கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகர் பகுதியில் தேர்தலை புறக்கணிக்கும்படி கூறி மாவோயிஸ்டுகளால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை கண்டறியப்பட்ட இந்த போஸ்டர்களில், விவசாயிகள் மற்றும் வாழைத்தோட்ட தொழிலாளர்கள் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் வலியுறுத்தி உள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பிற்கு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.