"சிக்கல் ஏற்பட்டால் அரசியலை விட்டு விலகுவேன்" -பஞ்சாப் முதல்வருக்கு ஹரியானா முதல்வர் உறுதி...

manoharlal khattar reply to amrinder singh in farmers rally issue

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்து மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், பஞ்சாபிலிருந்து டெல்லி வரை செல்ல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணி ஹரியானா, பஞ்சாப் மாநில எல்லையான ஷம்புவில் இன்று நடைபெற்றபோது, அங்கிருந்த விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், விவசாயிகள் பேரணி மேலும் முன்னேறாமல் இருக்கும் வகையில் அதனைக் கலைக்க முற்பட்ட காவல்துறையினர், எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். அதேநேரம் பேரணியைத் தடுப்பதற்காக பாஜக ஆளும் ஹரியானா மாநில எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இந்த செயலை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வருக்குத் தனது ட்விட்டர் பதிவின் மூலம் பதிலளித்துள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். அதில், "கேப்டன் அமரீந்தர் சிங், நான் மீண்டும் சொல்கிறேன், குறைந்தபட்ச ஆதார விலையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் அரசியலை விட்டு விலகுவேன் - எனவே, அப்பாவி விவசாயிகளைத் தூண்டுவதை நிறுத்துங்கள். கடந்த 3 நாட்களாக நான் உங்களை அணுக முயல்கிறேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அணுக முடியாத நிலையில் இருக்க முடிவு செய்தீர்கள். இதுதான் விவசாயிகள் பிரச்சனையில் நீங்கள் காட்டும் பொறுப்பா..?" எனத் தெரிவித்துள்ளார்.

captain amrinder singh farmers bill haryana
இதையும் படியுங்கள்
Subscribe