Skip to main content

தொடரும் வன்முறை: “44 நாட்களாகியும் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்" - காங்கிரஸ் கடும் தாக்கு

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

manipur tribal community issue congress asked question on narendra modi and amit shah

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காக பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 4 நாள் பயணமாக கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்கு சென்றார். அப்போது அவர் பலரையும் சந்தித்து பேசினார். இதையடுத்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டின் முன் குக்கி இன மக்களைக் காப்பாற்றக் கோரி குக்கி இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசுகையில், "கலவரத்திற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் செல்ல 25 நாட்கள் எடுத்துக் கொண்டார். வன்முறை தொடங்கி 44 நாட்கள் ஆகியும் மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். மணிப்பூரில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்க காங்கிரஸ் கட்சி ஆதரவாக உள்ளது" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.