Advertisment

மணிப்பூர் வன்முறை; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

Manipur incident The High Court was very displeased

Advertisment

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது.

இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6 ஆயிரத்து 532 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரு பெண்கள் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக இது வரை 37 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மணிப்பூர் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி சந்திர சூட், “மணிப்பூர் வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில் கூட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து விட்டது. மணிப்பூரில் வன்முறை நீடிக்கும் நிலையில் 2 மாதங்களாக மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. அரசால் மக்களைக் காப்பாற்ற இயலவில்லை என்றால் மக்கள் எங்கு செல்வார்கள்” எனத்தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை மணிப்பூர் மாநில டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

manipur
இதையும் படியுங்கள்
Subscribe