Skip to main content

அதிகரிக்கும் கரோனா பரவல்: 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்த வடகிழக்கு மாநிலம்!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

corona

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள், தாங்கள் அமல்படுத்திய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துவருகின்றன. அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி, எட்டு வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

 

இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இதனையடுத்து, கடந்த ஒன்பதாம் தேதி மணிப்பூர் மாநில அரசு, இரவு நேர ஊரடங்கை மாலை 7 மணியிலிருந்து காலை ஐந்து மணிவரை நீட்டித்தது. இருப்பினும் கரோனா பரவல் குறையவில்லை. இதனையடுத்து மணிப்பூர் மாநில அரசு, அம்மாநிலதில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

 

இந்த முழு ஊரடங்கு வரும் 18ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!