
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை (58). இவரது மனைவி, இவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நீண்ட கூந்தல் கொண்ட ஒரு பெண் தான் குடும்பத்தை சீரழித்து விட்டதாக மந்திரவாதி ஒருவர், செந்தாமரையிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அவர், அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களே, தனது மனைவி தன்னை விட்டு செல்ல காரணமாக இருந்ததாக நினைத்துள்ளார்.
இதன் காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டில் சஜிதா என்ற பெண்ணை செந்தாமரை கொலை செய்தார். அதன் பின்னர், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், செந்தாமரைக்கு சமீபத்தில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நீதிமன்றத்தின் நிபந்தனையும் மீறி, செந்தாமரை, நென்மாரா பஞ்சாயத்தில் உள்ள தனது வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். அங்கு, அவர் தனது அண்டை வீட்டாரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட சஜிதாவின் கணவர் சுதாகரன் (50) மற்றும் அவரது மாமியார் லட்சுமி ஆகியோரை, நேற்று முன்தினம் அவர்களது வீட்டில் செந்தாமரை வெட்டிக் கொலை செய்தார். பழிவாங்கும் நோக்கில் இந்த இரட்டைக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொலையை தொடர்ந்து, செந்தாமரை தலைமறைவானார். அதன் பின், சுதாகரனின் மகள் அளித்த புகாரின் பேரில், செந்தாமரை பிடிக்க தீவிர நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். தீவிர வேட்டைக்கு பிறகு, நேற்று இரவு, செந்தாமரையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.