
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும், இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருந்த போதிலும், தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி வருவதால் அந்த இடம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து வருகின்றது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் இறந்துபோனதாக கருதப்பட்ட நபர், 13 நாட்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பி வந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் குந்தி குரு என்ற 60 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வந்துள்ளார். இவர், ஜீரோ ரோடு பகுதியில் உள்ள உள்ள ஒரு அறையில் தனியாக வசித்து வருகிறார். அறையில் படுக்கை இருந்தாலும் கூட, உள்ளூரில் உள்ள சிவன் கோயிலின் வளாகத்தில் தூங்குவார். இந்த நிலையில், மெளனி அமாவாசையை முன்னிட்டு கடந்த ஜனவரி 28ஆம் தேதி கங்கை நதியில் புனித நீராட மகா கும்பமேளாவுக்கு குந்தி குரு சென்றுள்ளார். அடுத்த நாளான 29ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பிறகு, குரு திரும்பி வரவில்லை. இதனால், துயர சம்பவத்தில் குருவும் இறந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் நம்பியுள்ளனர்.
இந்த நிலையில் 13 நாட்களுக்குப் பிறகு, குந்தி குரு உயிரோடு வீடு திரும்பியுள்ளார். இதனை கண்ட உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இத்தனை நாட்களும், சாதுக்கள் குழுவுடன் இருந்து சாப்பிட்டதாகவும், நீண்ட நேரம் தூங்கியதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.