A man passed away after trying to take a selfie with a snake

Advertisment

பாம்புடன் செல்பி எடுக்க முயன்றநபர் அதே பாம்பினால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி. 28 வயதான இவர் கந்தகுரு என்ற இடத்தில் பழச்சாறு கடை வைத்து நடத்தி வந்தார். தனது கடையிலிருந்து வீடு திரும்பிய மணிகண்டா ரெட்டி பேருந்து நிலையத்தை கடந்து சென்றுகொண்டிருந்தபோது அங்கு பாம்பினை வைத்து ஒரு நபர் வித்தை காட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். உடனே அந்த பாம்புடன் செல்பி எடுக்க வேண்டும் என்று நினைத்த மணிகண்டா ரெட்டி அந்த பாம்பின் உரிமையாளரிடம்கேட்டுள்ளார். இதற்கு பாம்பின் உரிமையாளர் மறுப்பு தெரிவிக்க பணம் கொடுத்து பாம்பின் உரிமையாளரை சம்மதிக்க வைத்துள்ளார்.

பணத்தை கொடுத்த பின் பாம்பினை தனது கழுத்தில் சுற்றிவிடும்படி பாம்பின் உரிமையாளரிடம் மணிகண்டா ரெட்டி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் பாம்பினை மணிகண்டா ரெட்டியின் கழுத்தில் சுற்றிவிட பாம்புடன் மணிகண்டா ரெட்டி செல்பி எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாம்பினை கழுத்திலிருந்து எடுக்க முற்பட்டபோது பாம்பு மணிகண்டா ரெட்டியை கடித்துவிட்டது.

Advertisment

வலியால் துடித்த அவரை அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.