ADVERTISEMENT

'வாக்குகள் சிதறுவதை விரும்பவில்லை' - கோவாவில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மம்தா!

12:25 PM Oct 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல்காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறிவைத்து வருகிறது.

இந்தச் சூழலில், கோவாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, மம்தா பானர்ஜி கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்தநிலையில், அவர் கோவா ஃபார்வேர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயை சந்தித்து கூட்டணி அமைப்பது குறித்து பேசியுள்ளார்.

வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க விரும்புவதால், உள்ளூர் கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என விரும்புவதாகவும், எனவே விஜய் சர்தேசாயை சந்தித்ததாகவும் மம்தா கூறியுள்ளார். அதேபோல் விஜய் சர்தேசாய், பாஜகவை எதிர்க்க ஒரே எண்ணம் கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற மம்தாவின் கருத்தை வரவேற்பதாகவும், திரிணாமூல் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியினருடன் ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் சர்தேசாயின் கோவா ஃபார்வேர்டு கட்சி சிறிய கட்சி என்றாலும், கோவா அரசியலில் முக்கிய பங்காற்றிவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஆயினும் பாஜக கோவா ஃபார்வேர்டு கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசில் விஜய் சர்தேசாய் துணை முதல்வராகவும் இருந்தார்.

அதன்பின்னர் மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின்னர் பிறகு, 10 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்து பாஜகவின் பலத்தை அதிகரித்தனர். இதனையடுத்து விஜய் சர்தேசாய் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்துவந்த கோவா ஃபார்வேர்டு கட்சி, கடந்த ஏப்ரலில் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கோவா ஃபார்வேர்டு கட்சியை, கோவா திரிணாமூல் கட்சியோடு இணைக்குமாறும், அவ்வாறு இணைத்தால் கோவா மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்படும் எனவும் பிரசாந்த் கிஷோர் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் விஜய் சர்தேசாய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT