ADVERTISEMENT

குடியரசு தலைவர் ஆட்சிக்கு முயற்சி? - நெருக்கடிக்கு மத்தியில் பதவியேற்ற மம்தா!

10:58 AM May 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களின் முடிவுகள், கடந்த 2ஆம் தேதி வெளியானது. இதில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. அதேநேரத்தில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அங்கு வன்முறையும் வெடித்துள்ளது. இந்த வன்முறைகளில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் தொண்டர்கள் 6 பேர் இந்த வன்முறையில் பலியானதாக பாஜகவும், தங்கள் கட்சித் தொண்டர்கள் ஐந்து பேர் பலியானதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளன. இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநரிடம் கேட்டறிந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிகந்துவரும் வன்முறையில் பலியான பாஜக தொண்டரின் வீட்டிற்கு நேற்று (04.05.2021) நேரில் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, இன்று மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தவுள்ளார். அதேநேரத்தில் இந்த வன்முறைக்கு பாஜகவே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, அனைவரும் அமைதியாக இருக்குமாறும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள மம்தா, "தேர்தலில் தோற்ற பிறகு, மதவாத மோதல்களைத் தூண்ட பாஜக முயல்கிறது. நாங்கள் அதை நடக்கவிடமாட்டோம்" என கூறியிருந்தார். பாஜக வெற்றிபெற்ற இடங்களிலேயே அதிக வன்முறை நடப்பதாக கூறியுள்ள மம்தா, சட்டம் - ஒழுங்கு என்பது திங்கட்கிழமை வரை அவர்களது (மத்திய அரசு) குழந்தை. புதன்கிழமை நான் பதுவியேற்றதும் நிலைமையைக் கட்டுப்படுத்துவேன் என தெரிவித்திருந்தார்.

மேலும் மம்தா, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயலுவதாக குற்றஞ்சாட்டினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவும் இதே கருத்தைப் பிரதிபலித்தார். பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வருகையை விமர்சித்து அவர் பதிவித்துள்ள ட்வீட்டில், “ஜே.பி நட்டாவின் வருகைகள் அனைத்தும் பாஜக தேர்தலில் வெல்வதற்கு உதவவில்லை. இருப்பினும் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரும் முயற்சியாக இன்னொரு பயணமா?” என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை நெருக்கடிக்கு மத்தியில் மம்தா, இன்று மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT