Advertisment

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத்தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

Advertisment

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisment

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத்தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத்தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும்” என்று கூறினார்.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe