Skip to main content

"யார் யாருக்கு எதிராக இருக்கிறார்கள்" - மஹுவா மொய்த்ரா எம்.பி.யை கண்டித்த முதல்வர் மம்தா!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

mamata - mahua

 

மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக நாடியா மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்நிலையில் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகரில் மாநில அரசின் நிர்வாக கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கூட்டத்தின் நடுவே தனது கட்சி எம்.பியான மஹுவா மொய்த்ராவை உட்கட்சி பூசல் தொடர்பாக கண்டித்துள்ளார்.

 

கூட்டத்தின் நடுவே மம்தா, "மஹுவா, தெளிவாக ஒன்றை கூறுகிறேன். யார் யாருக்கு எதிராக இருக்கிறார்கள் என பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் தேர்தல் வரும்போது யார் போட்டியிடுவது, யார் போட்டியிடப்போவதில்லை என்பதை கட்சிதான் முடிவு செய்யும். எனவே, இங்கு கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. ஒருநபர் என்றென்றும் அதே பதவியில் இருப்பார் என்று கற்பனை செய்ய எந்த காரணமும் இல்லை" என்றார்.

 

மஹுவா மொய்த்ரா அண்மையில் திரிணாமூல் காங்கிரஸின் நாடியா மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

பக்கா பிளான்; பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கிய பாஜக!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Sandeshkhali Rekha Patra announced as BJP candidate for parliamentary elections

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. இதனையொட்டி பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹட் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் ஷேக் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பாசிர்ஹட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சந்தேஷ்காளி கிராமமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதியில் ரேகா பத்ராவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ரேகாவுக்கு சந்தேஷ்காளி மக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரேகா பத்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்  ஆளும் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேற்கு வங்கத்தில் புதிய டி.ஜி.பி. நியமனம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
New DGP in West Bengal Appointment

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாகத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. அதில், மேற்கு வங்க மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை நீக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறுகையில், “ராஜீவ் குமார் (டி.ஜி.பி.) ஆட்சியில் இருக்கும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) குறிப்பாக அரசின் முகமாக இருந்தார். அரசின் உத்தரவின்றி அவர் பணிபுரிய மாட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள, டி.ஜி.பி.யாக இருந்தும் மக்களின் குறைகளை கேட்காததால், பல புகார்களை பதிவு செய்துள்ளோம். இது நல்ல முடிவு. இது எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரியான விவேக் சஹாய் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.