Skip to main content

தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் மம்தா!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

mamata

 

மேற்கு வங்கத்தில் மார்ச் - ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்.

 

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான அன்று, முதலில் மம்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சுவேந்து அதிகாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவினை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக மம்தா, முடிவுகள் வெளியான அன்றே தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், தான் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று (18.06.2021) விசாரணைக்கு வந்தது. இதன்பிறகு இந்த வழக்கு 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

“வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை!” - உறவை துண்டித்த மம்தா பானர்ஜி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Mamata Banerjee broke off the her brother relationship

மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால், மேற்கு வங்கத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். 

அதன்படி, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும், அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கட்சி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார். இது காங்கிரஸ் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்திரி ஆகியோர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். 

இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹவுரா தொகுதியின் வேட்பாளராக சிட்டிங் எம்.பியான பிரசுன் பானர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஹவுரா தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற பிரசுன் பானர்ஜிக்கு நான்காவது முறையாக வாய்ப்பு வழங்கியதற்கு மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து பாபுன் பானர்ஜி கூறுகையில், “ஹவுரா வேட்பாளர் தேர்வில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. பல திறமையான வேட்பாளர்கள் இருந்தும், பிரசுன் பானர்ஜியை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த விஷயத்தில் மம்தா பானர்ஜி என்னுடன் உடன்படமாட்டார். ஆனால், தேவைப்பட்டால், ஹவுரா தொகுதியில் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.

பாபுன் பானர்ஜி பேட்டியளித்த, அடுத்த சில மணி நேரத்திலேயே மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை முறித்துக் கொள்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாபுன் பானர்ஜி ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்குகிறார். பேராசை பிடித்தவர்களையும் பிடிக்காது. வாரிசு அரசியலிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய பல செயல்பாடுகளை நான் ஏற்கவில்லை. எனவே, பாபுன் பானர்ஜியுடனான அனைத்து உறவையும் முறித்துக் கொள்கிறேன். எனது குடும்பமும் நானும், பாபுன் பானர்ஜி உடனான உறவை துண்டித்துக் கொள்கிறோம்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.