Mamata Banerjee says If Rahul Gandhi had not taken the video, this problem would not have arisen

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 143 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன் தினம் (19-12-23) காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதைப் போல், அனைவரின் முன்னிலையில் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய காட்சியையும், அதனை ராகுல் காந்தி வீடியோவாக எடுத்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க எம்.பி.க்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (20-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். நடந்ததை இயல்பான சம்பவமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Advertisment

இதனை ராகுல் காந்தி வீடியோ எடுக்காமல் இருந்திருந்திருந்தால், இது இவ்வளவு பெரிய சர்ச்சையாகவே ஆகியிருக்காது. அதோடு, என்னிடம் இதுபற்றி கேள்வி எழுப்பி இருக்க மாட்டீர்கள்” என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சம்பவத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் மேற்கு வங்கம் சார்ந்த பிரச்சனைகளைத் தவிர வேறு எது பற்றியும் பேச விரும்பவில்லை” என்று கூறி சென்றார்.