Mamata banerjee assured no alliance congress in west bengal

தலைநகர் டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டது. இதனால் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என்று டெல்லி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. மூன்று கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

இதனையடுத்து, கடந்த 8ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் 48 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, வெறும் 22 தொகுதிகளை மட்டுமே பிடித்து தோல்வியைச் சந்தித்தது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாமல் பெரிய அளவில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

Advertisment

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்து களம் கண்டனர். அதில், பா.ஜ.கவை மைனாரிட்டி அரசாக மாற்றி ஆட்டம் காண வைத்தது. அதன் பிறகு நடந்த மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க தொடர் வெற்றி பெற்றிருப்பது இந்தியா கூட்டணியை ஆட்டம் காண வைத்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏகளுக்கு அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய மம்தா பானர்ஜி, “டெல்லியில், காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு உதவவில்லை. மீண்டும் ஹரியானாவில் ஆம் ஆத்மி காங்கிரசுக்கு உதவவில்லை.

இதன் விளைவாக, இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றியாளராக உருவெடுத்தது. டெல்லி மற்றும் ஹரியானாவில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக இருந்திருந்தால், இரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளுக்கு முடிவுகள் இப்படி இருந்திருக்காது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு எதுவும் இல்லை. எனவே மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். 2026 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று நான்காவது முறையாக நாங்கள் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம்” என்று கூறினார்.