Skip to main content

"எதிராக பேசினால் பாகிஸ்தானியர் என முத்திரை" மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு...

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியது குறித்து மம்தா பானர்ஜி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

 

mamata banerjee about jnu incident

 

 

நேற்று இரவு நடந்த இந்த தாக்குதல் குறித்த முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, "இது மிகவும் கவலைக்குரியது. இது ஜனநாயகம் மீதான ஆபத்தான நடப்பட்ட தாக்குதல் ஆகும். அவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் பாகிஸ்தானியர்கள் மற்றும் நாட்டின் எதிரி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னர் நாட்டில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை பார்த்ததில்லை. டெல்லி காவல்துறை அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் கிடையாது. அது மத்திய அரசின் கீழ் உள்ளது. ஒருபுறம் அவர்கள் பாஜக குண்டர்களை அனுப்பியுள்ளனர், மறுபுறம் அவர்கள் காவல்துறையை செயலற்றவர்களாக மாற்றியுள்ளனர். அதிகாரம் படைத்தவர்களின் பேச்சை மீறி போலீசாரால் என்ன செய்ய முடியும். இது ஒரு பாசிச சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்" என தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கத் தேர்தல்; அனைத்து இடங்களையும் கைப்பற்றியது இடதுசாரி கூட்டணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Left-wing alliance wins in JNU student union elections

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி  மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜஷே ஜோஷ் வெற்றி பெற்றியிருந்தார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் சங்கத் தேர்தல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் உள்பட 4 பதவிகளையும் இடதுசாரி மாணவர்கள் அமைப்பு கைப்பற்றியுள்ளது. தலைவர் தேர்தலில் ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர ஆஜ்மீராவை தோற்கடித்து இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த பட்டியலின மாணவர் தனஞ்செய் 2,598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.   

கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பட்டி லால் பாயிர்வா என்ற பட்டியலின மாணவர் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான நிலையில், தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பட்டியலின மாணவர் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) அனைத்து பதவிக்கான போட்டியிலும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மம்தாவின் '10 மணி அறிவிப்பு' - பதறிய பாஜக

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
BJP criticizes Mamata's '10 o'clock announcement'

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மம்தா பானர்ஜியிடம் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த அரசு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதனை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்' என தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்பில், 'ஏப்ரல், 2024 முதல், எங்கள் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக  ஒவ்வொரு மாதமும் ரூ.750, மேலும், எங்களது அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.500 உயர்த்த முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், எங்கள் மக்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருந்தாலும், அரசியல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு இது ஏமாற்றத்தையே தந்துள்ளது என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது இன்று மேற்குவங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாக்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் அதனை திசைதிருப்ப மம்தா மேற்கொண்ட நூதன யுக்தி என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.