"நாங்கள் அடிபணிய மாட்டோம்" -மம்தா பானர்ஜி ஆவேசம்...

mamata banerjee about eight mp suspension

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், நேற்று காலை வேளாண் தொடர்பான இரு மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது.

இதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து எறிந்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜு சதாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இந்நிலையில் எம்.பி.க்களின் இடைநீக்கம் குறித்து கருத்துத்தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, "விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது துரதிஷ்டவசமானது. இது அரசின் அதிகார மனநிலையைக் காட்டுகிறது. மேலும் ஜனநாயகக் கொள்கைகளை அரசு பின்பற்றவில்லை, என்பதும் தெரியவருகிறது. நாங்கள் அடிபணிய மாட்டோம். பா.ஜ.க அரசை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

farmers bill Mamata Banerjee
இதையும் படியுங்கள்
Subscribe