ADVERTISEMENT

சர்ச்சையான விவகாரம்; ‘ராகுல் காந்திதான் காரணம்’ - மம்தா குற்றச்சாட்டு

12:17 PM Dec 22, 2023 | ArunPrakash

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 143 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த (19-12-23) காலை, இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதைப் போல், அனைவரின் முன்னிலையில் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய காட்சியையும், அதனை ராகுல் காந்தி வீடியோவாக எடுத்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி சர்ச்சையாகி வருகிறது. இதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க எம்.பி.க்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதற்கு ராகுல் காந்திதான் காரணம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் எல்லோரையும் மதிக்கிறோம்; எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் தலைவருமான ஜகதீப் தன்கரை போன்று செய்து காட்டியது அவரை அவமதிப்பதாகாது. இது அரசியலில் சாதரணமான ஒன்று; ஆனால் அதனை ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அவர் வீடியோ எடுத்ததுதான் இந்த விவகாரம் சர்ச்சையானதற்கு காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT