Skip to main content

“உள்துறை அமைச்சரை விளக்கமளிக்க கூறியது குற்றமா?” - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Mallikarjuna Kharge Condemned about suspension of 15 opposition Mp

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், ஜோதிமணி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே இருந்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியதற்காக 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவர்கள் செய்த குற்றம் என்ன?

பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய உள்துறை அமைச்சரை சபையில் விளக்கமளிக்க வலியுறுத்தியது குற்றமா? ஆபத்தான பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த கோரியது குற்றமா? இந்த நடவடிக்கை தற்போதைய காலகட்டத்தின் ஒரு அடையாளமான சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையை காட்டவில்லையா” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார்.