Advertisment

“ஆளுங்கட்சிக்குள்ளேயே இடைவெளி தோன்றத் தொடங்கியுள்ளது” - அமித்ஷாவுக்கு கார்கே பதில் 

Mallikarjun Kharge's reply to Amit Shah's letter on Manipur issue

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்துப் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவ்வாறு அவர் பேசுவது அவரது மரியாதையைப் புண்படுத்துவதாகக்கருதுகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுதிய கடிதத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

Advertisment

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து ஆறாவது நாளான இன்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதினார். அதில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதனால், கட்சி வேறுபாடின்றி நாடாளுமன்றக் கூட்டத்தொடரினை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அந்தக் கடிதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “ஒரே நாளில் பிரதமர் மோடி, நாட்டின் எதிர்க்கட்சிகளைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால், அதே நாளில் உள்துறை அமைச்சராகிய நீங்கள் ஒரு உணர்ச்சிகரமான கடிதம் எழுதி, எதிர்க்கட்சிகளிடமிருந்து நேர்மறையான அணுகுமுறையை எதிர்பார்க்கிறீர்கள். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பல ஆண்டுகளாகவே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால், தற்போது அந்த இடைவெளி ஆளும் கட்சிக்கு உள்ளேயே தோன்றத் தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகள் திக்கற்று செயல்படுகின்றன என்றுபிரதமர் கூறியிருப்பது அபத்தமானது மட்டுமல்ல, துரதிர்ஷ்டவசமானதும் கூட. நீங்கள் உங்கள் கடிதத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் தொடர்பான வார்த்தைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. மணிப்பூர் குறித்துப் பிரதமர் நாடாளுமன்ற சபைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு செய்வது அவரது மரியாதையைப் புண்படுத்துவதாகக் கருதுகிறார் என்கிறீர்கள்.

கடிதத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிது. ஆனால், உங்களின் நடத்தையின் மூலம் மட்டுமே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். அப்படி அவை அலுவல்கள் சீராக நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துகளை எழுப்ப வாய்ப்பளிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் மீது எங்களுக்கு அர்ப்பணிப்பு உள்ளது, அதற்காக எந்த விலையையும் செலுத்துவோம்”. என்று கூறினார்.

manipur congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe