ADVERTISEMENT

“லாலு பிரசாத் கூறியது உண்மையாகிவிட்டது” - நிதிஷ்குமார் வெளியேறியது குறித்து கார்கே

01:04 PM Jan 29, 2024 | mathi23

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (28-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். முன்னதாகவே, எங்களுக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. நான், லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவிடம் பேசும் போது, அவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறப் போவதாக தெரிவித்தனர். அவர் கூட்டணியில் இருக்க விரும்பியிருந்தால் அவர் இருந்திருப்பார். ஆனால், அவர் வெளியேற விரும்புகிறார். இது நமக்கு முன்பே தெரிந்தது தான். இந்தத் தகவலை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் முன்பே எங்களுக்குத் தெரிவித்தனர். இன்று அது உண்மையாகிவிட்டது” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT