/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/malli-ni_2.jpg)
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலை எதிர்க்கொள்ள பணம் இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கலபுரகி பகுதியில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடைபணம் வங்கிகளில் உள்ளது. ஆனால், அந்த நிதியை பயன்படுத்த முடியாத அளவுக்கு மத்திய அரசு வங்கி கணக்குகளை முடக்கிவிட்டனர். வருமான வரித்துறையினர் அதிக தொகையை அபராதமாக விதித்துள்ளனர். அதனால் தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. எங்கள் கட்சியின் கணக்கு மூடப்பட்டுவிட்டது. எங்களின் ரூ.200 முதல் ரூ.300 கோடியை அவர்கள் நிறுத்தினால், தேர்தல் எப்படி நடக்கும்?.
பா.ஜ.கவிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளது. அவர்களின் திருட்டு வெளியே வரும் என்பதால், அவர்கள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் பற்றி வெளியிடவில்லை. அவர்களின் தவறான செயல்கள் வெளியே வரும் என்பதால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட வரும் ஜூலை வரை அவகாசம் கேட்கிறார்கள்” என்று கூறினார்.
சமீபத்திய சூழலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் இன்று காலையில் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)