ADVERTISEMENT

“நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது?” - மல்லிகார்ஜுன கார்கே

05:40 PM Feb 05, 2024 | mathi23

மணிப்பூர் மாநிலத்தில், கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி இன்று வரை பார்வையிடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மணிப்பூரில் ஓயாத வன்முறையால் எண்ணிலடங்கா உயிர்களை அழித்து 9 மாதங்கள் ஆகிறது. ஆனால் பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்குச் செல்ல ஒரு மணி நேரம் கூட கிடைக்கவில்லை ஏன்? அவர் கடைசியாக, தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த பிப்ரவரி 2022இல் மணிப்பூருக்குச் சென்றார். இப்போது மணிப்பூர் மக்களே தங்களைத் தற்காத்துக் கொள்ள விட்டுவிட்டார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு மே 4 ஆம் தேதி முதல் 200க்கும் மேற்பட்டோர் மணிப்பூரில் இறந்துள்ளனர். 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் உணவு இல்லாமல் இழிவான நிலையில் தொடர்ந்து தவித்து வருகின்றனர். மக்கள் ஏற்கனவே தங்கள் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டனர். அவர்களால் எங்கும் செல்ல முடியாத நிலையில் அவர்களின் எதிர்காலம் இருண்டுவிட்டது.

சுராசந்த்பூர் பகுதியில் உள்ள முகாம்களில் மட்டும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் காரணமாக 80 பேர் இறந்துள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதே தவிர, மாநில அரசிடமிருந்து எந்தவித உதவியும் வழங்கப்படவில்லை. 2023 ஆகஸ்டில் மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதி என்ன ஆனது? மணிப்பூரில் இயல்பு நிலையும், அமைதியும் திரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT