Mallikarjun Kharge apologizes in Parliament

நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில், நேற்று (10/03/2025) மொழிக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசுக்கு நிதி வழங்காதது குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (un democratic, uncivilized)” என இருமுறை குறிப்பிட்டார்.

Advertisment

தமிழக எம்.பிக்களை நாகரீகமற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் பேசியதற்கு திமுக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக மத்திய அமைச்சர், அந்த வார்த்தையை திரும்பப் பெற்றார். பிரதானின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, மத்திய அமைச்சருக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது, பல இடங்களில் அவரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த தமிழக எம்பிக்கள் மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடையில் வந்து மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Advertisment

இந்த நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (11-03-25) பேசினார். அப்போது அவர், “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்.பிக்களை நாகரீகமற்றவர்கள் என்று கூறியுள்ளார். அவரும், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும் நாட்டின் ஒரு பகுதி மக்களின் சுயமரியாதையைப் புண்படுத்தியதற்காக கண்டனம் தெரிவிக்கிறேன். அவர்கள் நாட்டைப் பிரிப்பதைப் பற்றி பேசுகிறார்கள்.. நாட்டை உடைப்பது பற்றி பேசுகிறார்கள். தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழ் மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை அப்பட்டமாக புறக்கணிக்கப்படுகிறது. மோடி அரசாங்கத்தில் உள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அவைத் தலைவர் குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக பா.ஜ.க எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து பா.ஜ.க தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, “மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்.. அந்த வார்த்தையை அவர் திரும்பபெற வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்தார். உடனடியாக எழுந்த மல்லிகார்ஜுன கார்கே, “மன்னிக்கவும். நான் அவைத் தலைவரைப் பற்றி பேசவில்லை. அது அரசாங்கக் கொள்கைகளைப் பற்றியது. எனது கருத்துகளால் நீங்கள் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Advertisment