Mahua Moitra marries former MP germany

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரை வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டார்.

மேற்கு வங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நட்சத்திரப் பேச்சாளருமான மஹுவா மொய்த்ரா கடந்த மே 3 ஆம் தேதி ஜெர்மனியில் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை திருமணம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த 1974 அக்டோபர் 12ஆம் தேதி அசாமில் பிறந்த மஹுவா மொய்த்ரா, முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர், கடந்த 2010ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியின் கட்சியில் சேர்ந்த மஹுவா, 2019இல் மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், கடந்தாண்டு 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், மஹுவா மொய்த்ரா வெற்றி எம்.பி ஆனார். மக்களவையில் தனது தனித்துவமான மற்றும் தைரியமான பேச்சால் பெருமளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் பேசும் ஒவ்வொரு கருத்தும் தேசிய அளவில் கவனம் பெறும்.

அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி.பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் கடந்த 2023ஆம் ஆண்டு அவரது பதவி பறிக்கப்பட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றியை பெற்றார்.

அதே போல், ஒடிசாவின் பூரியில் 1959 அக்டோபர் 23ஆம் தேதி பிறந்த பினாகி மிஸ்ரா, மூத்த அரசியல்வாதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பினாகி, 1996இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பூரி தொகுதியில் இருந்து எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து 2009, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.