மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள டாங்கிரி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகின்றன. சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது வரையில் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Advertisment

maharashtra state mumbai building collapse

மிகவும் குறுகலான சந்து பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் கடந்த வாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. குறுகிய சந்து காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இடிபாடுகளை அகற்ற மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விபத்து நடந்த இடத்தையும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்றார். தற்போது வரை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.