வட கிழக்கு மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழையால் பீகார், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த மாநிலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் மும்பை, தானே, கல்யாண் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. மும்பை விமான நிலையம் மற்றும் ரயில்வே நிலையங்கள் நீரில் முழ்கியுள்ளதால் போக்குவரத்து சேவையை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த மாநிலத்தில் இன்று அதிதீவிர மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் "ரெட் அலெர்ட் " எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சம்தோலி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 வயதுடைய ராணி என்ற குரங்கு ஒன்று வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட மீட்புப் படையைச் சேர்ந்த வீரர் விரைந்து சென்று குரங்கைக் காப்பாறினார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள குரங்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.