maharashtra incident on Reservation

Advertisment

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா எனும் சமூகத்தினர் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை ஏற்று கடந்த 2018ஆம் ஆண்டு, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அப்போது ஆட்சியில் இருந்து பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து, தடை விதித்தது.

இதனைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதனிடையே, மராத்தா சமூகத்தின் செயல்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது இவரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிராக சில சர்ச்சை கருத்துகள் வந்ததாகக் கூறப்பட்டது. மேலும், இந்தப் போராட்டத்தை போலீஸார் ஒடுக்கிய போது சர்ச்சையானது.

அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தார். மேலும், அக்டோபர் 24ஆம் தேதிக்குள் இட ஒதுக்கீடு கோரிக்கைநிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார். அதனை ஏற்று மனோஜ் ஜராங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். ஆனால், அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால், மனோஜ் ஜராங்கே கடந்த 25ஆம் தேதி அன்று மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று (30-10-23) மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மராத்தா சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு, ரோட்டில் டயர்களை தீ வைத்து எரித்தனர். மேலும், நேற்று காலை தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கியின் வீடு மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால், எம்.எல்.ஏ.வின் வீடு தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து எம்.எல்.ஏ.வின் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். அதே போல், மாலையில் பீட் மாவட்டத்தில் மற்றொரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்தீப், முன்னாள் அமைச்சர் ஜெய்தத் கிரிசாகர் ஆகியோரின் வீடுகளுக்கும் தீவைத்தனர். மேலும், பீட் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து, அந்தப் பகுதியேகலவர பூமியாக மாறியுள்ளது. இதனால், அங்குஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.