Advertisment

மொழி குறித்த உத்தரவால் சர்ச்சை; “இந்தி கட்டாயமில்லை தேர்வு செய்யலாம்” - மகாராஷ்டிரா முதல்வர்

Maharashtra Chief Minister Controversy over hindi language order

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசு அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம், வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Advertisment

மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசியிருந்தார். புதிய கல்விக் கொள்கை மூலம் மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிக்கும் நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானதால், மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயமாகவே உள்ளது என்றும், இந்தி மொழி திணிக்கப்படவில்லை என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென பல்டி அடித்தார். அதனை தொடர்ந்து, பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கண்டிப்பாக இந்தி மொழி இருக்கும் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மகாராஷ்டிராவில் இருமொழி கொள்கையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்த வேண்டும் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதாஜி பூஷேவுக்கு கடிதம் எழுதினார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழி பொதுவான மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என மாநில அரசு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. திருத்தப்பட்ட அரசாங்கத் தீர்மானத்தில், இந்தி கட்டாயமாக இருப்பதற்குப் பதிலாக பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த இந்திய மொழியையும் படிக்க விருப்பம் தெரிவித்தால் அவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதற்கு மராத்தி ஆதரவு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்கதவு வழியாக இந்த கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று (18-06-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மாணவர்கள் இந்தி கற்க வேண்டும் என்ற கட்டாய நிலை நீக்கப்பட்டுள்ளது. இப்போது எந்த இந்திய மொழியையும் மூன்றாவது மொழியாக தேர்வு செய்யலாம். அதற்கு குறைந்தது 20 மாணவர்கள் இருந்தால் ஒரு ஆசிரியர் கிடைக்கச் செய்யப்படுவார். தேவைப்பட்டால், ஆன்லைன் கல்வியும் வழங்கப்படும். புதிய கல்விக் கொள்கையில், மூன்று மொழி கட்டாயம் என்று இருக்கிறது. அதன்படி, தாய்மொழி கட்டாயம், அதை தவிர மாணவர்கள் வேறு இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள். அவற்றில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும். இயற்கையாகவே பலர் மூன்று மொழிகளில் ஒன்றாக ஆங்கிலத்தைத் தேர்வு செய்கிறார்கள். ஆங்கிலம் பரவலாக ஊக்குவிக்கப்பட்டாலும், இந்திய மொழிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இது பொருத்தமானதல்ல.

இந்திய மொழிகள் ஆங்கிலத்தை விட சிறந்தவை. ஆங்கிலம் தொடர்பு மொழி என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், புதிய கல்விக் கொள்கையின் காரணமாக மராத்தி அறிவு மொழியாக மாறியுள்ளது. மராத்தியில் பொறியியல் கற்பிக்கத் தொடங்கியுள்ளோம், இது முன்பு செய்யப்படாத ஒன்றாகும். புதிய கல்விக் கொள்கையின் காரணமாக மராத்தி உலகளாவிய மொழியாக மாறியுள்ளது. அதனால், மொழிகள் தொடர்பான சர்ச்சைகள் தேவையற்றவை என்று நான் நம்புகிறேன். முழு நாடும் மூன்று மொழி கொள்கையை பின்பற்றும் போது மகாராஷ்டிரா இரண்டு மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு மூன்று மொழி கொள்கை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியது, ஆனால் நீதிமன்றம் அவர்களின் வாதத்தை ஏற்கவில்லை. மூன்றாவதாக இந்திய மொழியைக் கற்றுக்கொள்வதில் என்ன தீங்க இருக்கிறது? என்று நான் கேட்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Raj Thackeray Devendra Fadnavis NEW EDUCATION POLICY marathi Maharashtra hindi language
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe