மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக புனேயில் உள்ள கொந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 60 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து அருகேயுள்ள குடிசை பகுதியில் விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்றும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தானே, மும்பை, பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளும் நல்ல மழைப்பொழிவை பெற்று உள்ளன. தற்போது, ஏரிகளில் வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில்வே போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இரு மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விரைந்துள்ளன.
அதே போல் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.