
கர்நாடகா மாநிலம், பெங்களூருவின் ஹெக்டே நகரில் மதரஸா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியோடு விடுதி ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த மதரஸா பள்ளியை, முகமது ஹாசன் என்பவர் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், மதரஸா விடுதியில் தங்கி படித்து வரும் 5ஆம் வகுப்பு சிறுமி ஒருவர், கடந்த 16ஆம் தேதி விளையாடும் போது தற்செயலாக உணவைக் கொட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது விடுதி தோழர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், முகமது ஹாசன் அந்த சிறுமியை அறைந்து, காலால் உதைத்து கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சிறுமியை தாக்கிய முகமது ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.