/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court_5.jpg)
போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம்நாடு பயன்படுத்தப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வேலூர் மாவட்டம், பொம்மி குப்பத்தைசேர்ந்த விஜயகுமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப்குமார், இந்த வழக்கில் தொடர்புடைய முதல் மற்றும் இராண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான லாரியை கொண்டு சரக்குகளைக் கையாளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பது மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விஷயமாக கருதுவதாக தெரிவித்ததுடன், வழக்கில் மத்திய, மாநில அளவிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளை, தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமிழக உள்துறை செயலாளரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:
- போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன?
- பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் இயல்பு, அளவு என்ன? அவை எப்படி அழிக்கப்படுகிறது?
- வெளிநாட்டவருக்கு இதில்தொடர்பு உள்ளதா?
- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தடுப்பு காவல் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? அந்த வழக்குகளிலிருந்து எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்? எந்த காரணத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்?
- இதுபோன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள் என்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள்? போதைப்பொருள் நுகர்வோரால் என்ன குற்றங்கள் நடக்கின்றன? பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?
- போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க மையங்கள் ஏதும் உள்ளனவா?
- போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம்தான் காரணமா? மாணவர்களும், இளைஞர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களா?
- போதைப்பொருள் கடத்தல் மையமாக இந்திய நாடு பயன்படுத்தப்படுகிறதா?
- கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் எங்கு விளைவிக்கப்படுகின்றன,அடர்ந்த காடுகளுக்கு உள்ளேயும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், காவல்துறையிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் கண்காணிக்கவோ, அவற்றை அழிக்கவோ ஏன் முடியவில்லை?
- போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோத பணம் சம்பாதிப்பதை தவிர்த்து வேறு காரணங்கள் உள்ளனவா?
- போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?
- கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தலில் எவ்வளவு தொகை ஈடுபடுத்தப்பட்டுள்ளது?
- போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களைகையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்கக்கூடாது?
இதுகுறித்து 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)