madhyapradesh advocate issue

வழக்கறிஞர் ஒருவரை இஸ்லாமியர் என நினைத்து போலீஸார் தாக்கிய விவகாரத்தில் விளக்கம் கேட்டு மத்தியப் பிரதேச மாநிலம் பீதுல் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயரதிகாரிக்கும் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலம் பீதுல் மாவட்டத்தில் வசித்து வரும் வழக்கறிஞர் தீபக் பந்தீல் கடந்த மார்ச் 23ஆம் தேதி சர்க்கரை நோய்க்கான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். லாஃடவுன் கூட அறிவிக்கப்படாத அந்த நாளில், தீபக்கை வழிமறித்த போலீஸார் அவரை கடுமையாகத் தாக்கினர். அவர் காதிலிருந்து ரத்தம் வர, உடலில் சிராய்ப்புக் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்று அவர் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளார்.

Advertisment

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் மீது வழக்கு தொடர முடிவெடுத்த தீபக் அதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளார். அப்போது சமாதான நடவடிக்கையாக அவரிடம் தொலைபேசியில் பேசிய காவலர் ஒருவர், தாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து அடித்ததாகக் கூறி சமாதானப்படுத்தியுள்ளார். பதிலுக்கு, "நான் முஸ்லிம் என்று நினைத்து அடித்தீர்கள் இல்லையா?" எனத் தீபக் கேள்விகேட்டுள்ளார். அதற்கு போலீஸார் ஒருவர், "ஆம் உங்கள் தாடி நீளமாக இருந்ததால் அவ்வாறு நினைத்துவிட்டோம். எப்போதெல்லாம் இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் போலீஸ் இந்துக்கள் பக்கமே நிற்கிறது. முஸ்லிம்களுக்கும் இது தெரியும். இந்தச் சம்பவம் தவறு, எங்களிடம் வேறு வார்த்தைகள் இல்லை" என்று கூறியுள்ளார்.

இந்த உரையாடல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், அந்தக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில், திடீரென பல்டியடித்த போலீஸார், தீபக்கை யாரும் தாக்கவே இல்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனக் கூற ஆரம்பித்தனர். இதனையடுத்து தீபக் அப்பகுதி சி.சி.டி.வி. காட்சிகளைக் கேட்டு ஆர்.டி.ஐ. மூலம் விண்ணப்பித்தார். ஆனால் அவர் உரிய காரணம் தெரிவிக்காததால் வீடியோ காட்சிகளை வழங்க முடியாது என மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மத்தியப் பிரதேச மாநிலம் பீதுல் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயரதிகாரிக்கும் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment