Advertisment

லஞ்சப் பணத்தை மென்று விழுங்கிய அரசு அதிகாரி... வைரல் வீடியோ! 

Madhya Pradesh official swallows Rs 5,000 bribe money viral video

Advertisment

அரசு அலுவலகங்களில் அவ்வப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல், பொதுமக்கள் சிலரும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் குறித்து புகார் கூறுவர். பின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரும் இரசாயனம் தடவிய பணத்தை அதிகாரிகளிடமோ அல்லது அலுவலர்களிடமோ கொடுக்கும்போது அந்த இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைந்திருந்து அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வார்கள். தமிழ்நாட்டில் சில இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வருகிறார்கள் என்று அறிந்ததுமே பணத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசி எறியும் சம்பவங்களும் நடைபெற்றதை நாம் படித்திருப்போம். இதையெல்லாம் விட மிக சுவாரஸ்யமான சம்பவம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம், கட்னி பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் சிங் லோதி. இவர் தனது நிலம் தொடர்பான விவகாரத்திற்காக கட்னி பகுதியில் உள்ள வருவாய் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வருவாய்த்துறை அதிகாரியான கஜேந்திர சிங், என்பவர் சந்தன் சிங் லோதியிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தன் சிங் லோதி, மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தார். அந்தப் புகாரை ஏற்ற ஜபல்பூர் சிறப்பு காவல்துறையினர் சந்தன் சிங் லோதியை, கஜேந்திர சிங்கிடம் அவர் கேட்ட பணத்தை தரும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தன் சிங் லோதி, 5,000 ரூபாயை கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்தில் வைத்து அவரிடம் அந்தப் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையினர் மறைந்திருந்ததை கஜேந்திர சிங் கண்டறிந்துள்ளார். அவர்களிடம் சிக்காமல் இருக்க தான் லஞ்சமாக வாங்கிய 5000 ரூபாயை உடனடியாக தனது வாயில் போட்டு அந்த நோட்டுகளை மென்று விழுங்கினார்.

Advertisment

இதனைக் கண்ட ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையினர் உடனடியாக அவரை அந்த மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் மென்று விழுங்கிய 5,000 ரூபாய் மீட்டனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடந்துவருகிறது. மருத்துவமனையில் இருந்தவர்கள் இந்த நிகழ்வை தங்கள் கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Bribe MadhyaPradesh
இதையும் படியுங்கள்
Subscribe