Skip to main content

“பயங்கரவாதிகளின் சகோதரி” - கர்னல் சோபியா குரேஷியை இழிவுபடுத்திய பா.ஜ.க அமைச்சர்!

Published on 14/05/2025 | Edited on 14/05/2025

 

madhya pradesh BJP minister kunwar vijay shah insulted Colonel Sophia Qureshi comparing illegal people

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் கூட்டாக இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது. இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்த அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. .

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை லெப்டினண்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பெண் அதிகாரிகளை கொண்டே விவரங்களை வெளியிட வைத்திருந்தது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனை பலரும் பாராட்டி இருந்தனர். 

madhya pradesh BJP minister kunwar vijay shah insulted Colonel Sophia Qureshi comparing illegal people

இந்த நிலையில், கர்னல் சோபியா குரேஷி குறித்து பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரான குன்வார் விஜய் ஷா, மோவ் அருகே உள்ள மன்பூர் நகரில் நடந்த ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசினார். அப்போது அவர், “மோடி  சமூகத்திற்காக பாடுபடுகிறார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் எங்கள் மகள்களை கைம்பெண் ஆக்கியவர்களுக்கு, ஒரு பாடம் கற்பிக்க நாங்கள் அவர்களின் சொந்த சகோதரியை அனுப்பினோம். சுற்றுலாப் பயணிகளை மதத்தைக் கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அதை மோடியும் செய்திருக்க முடியாது. எனவே, அவர், பயங்கரவாதிகளின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பினார். அதனால், நீங்கள் எங்கள் சகோதரிகளை கைம்பெண்கள் ஆக்கினால், உங்கள் சகோதரி வந்து உங்கள் ஆடைகளைக் களைவாள்.

நாட்டின் கௌரவம், நமது மக்களின் கண்ணியம், நமது பெண்களின் கணவர்களை இழந்ததற்கான பழிவாங்கலை, உங்கள் சாதி, உங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதன் மூலம் மட்டுமே பெற முடியும். மோடி, அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து உங்களைக் கொல்வேன் என்று கூறியிருந்தார், அவர் அதையே செய்தார். அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களைக் கொன்றார்” என்று சர்ச்சையாக பேசினார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எனது உரையை வேறு சூழலில் பார்க்காதீர்கள். நான் அந்த முறையில் பேசவில்லை என மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் நமது சகோதரிகள், அவர்கள் ஆயுதப் படைகளுடன் சேர்ந்து மிக பலத்துடன் பழிவாங்கியுள்ளனர். அவர்களை பழிவாங்கிய கர்னல் சோபியா குரேஷி எனது சொந்த சகோதரிக்கு மேலானவர். யாரையும் காயப்படுத்த எனக்கு விருப்பமில்லை. நான் கூறியதில் யாராவது மணம் புண்பட்டிருந்தால், இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்