
பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று வெளியிட்டது. இது தொடர்பான உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவர் மாதபி புரி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருப்பதாக ஹிண்டன்பர்க் பர்பரப்பு அறிக்கை வெளியிட்டது. மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாலே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டி இருந்தது. அதானி குழுமம் முறைகேடு விவகாரத்தைச் செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் தலைவர் மீதே ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு புகார் கூறியது இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.
இந்த நிலையில், செபி தலைவராக இருக்கக்கூடிய மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் இன்றுடன் (28-02-25) முடிவடைகிறது. அதனால், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக துஹின் காந்த பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டின் ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, மத்திய நிதியமைச்சகத்தில் வருவாய் துறையில் மூத்த அதிகாரியாக இருந்துள்ளார். இவர், கடந்த 2024இல் நிதிச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.