lvb moratorium to be lifted

Advertisment

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தனியார் வங்கியான, 'லட்சுமி விலாஸ் பேங்க்' தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மருந்து நிறுவனம் ஒன்று ரூ.726 கோடி கடன் வாங்கி இருந்தது. இதுபோலவே வேறு சில நிறுவனங்களும் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்றிருந்தன. அந்த நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் லட்சுமி விலாஸ் வங்கி மிகவும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், வங்கியின் தினசரி பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்ட சூழலில், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி, மத்திய நிதி அமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கிக்கு, சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி டிசம்பர் 16 -ஆம் தேதி வரை, தனிநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

லட்சுமி விலாஸ் வங்கியில் வாராக்கடன் அளவு அதிகரித்ததாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக மற்ற நிதி நிறுவனங்களுடன் வங்கியை இணைக்கும் அதன் திட்டம் தோல்வியடைந்ததாலும், வங்கியின் நிதிநிலையைச் சீர்செய்யும் பொருட்டு அவ்வங்கியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது ரிசர்வ் வங்கி. இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கியைச் சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2500 கோடி ரூபாயை டிபிஎஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியில் செலுத்த உள்ளது. இதற்கு பதிலாக, லட்சுமி விலாஸின் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறைக்கடன்களில் 1.6 பில்லியன் டாலரின் உரிமையை டிபிஎஸ் வங்கி பெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கிக் கிளைகள் அனைத்தும் இன்று முதல் டிபிஎஸ் வங்கியின் கிளைகளாகச் செயல்பட உள்ளன. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடும் தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.