
ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் ‘மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை மகளிருக்கு லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) என்ற பன்னாட்டு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுமார் 60,000 ஊழியர்கள் பணிபுரியும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்காக, ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில் இளைஞர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எவ்வளவு நேரம் தான் வீட்டில் மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றும், ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வேலை பார்க்க வேண்டும் என்றும் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையான சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.