
திருமணத்தைப் பயன்படுத்தி இந்து சமூகத்தினரை, மற்ற சமூகத்தினர் கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அவ்வாறு கட்டாயம் மத மாற்றங்கள் செய்பவர்களை ‘லவ் ஜிகாத்’ என்று பா.ஜ.க பொதுவாக அழைத்தது. அதனை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் அலகாபாத் உயர் நீதிமன்றம்கடந்த 2021இல் தெரிவித்திருந்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வரப்பட்டது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவிலும் ‘லவ் ஜிகாத்’ சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், கூட்டணி கட்சித் தலைவர்களான சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வர்களாகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் ‘லவ் ஜிகாத்’ தொடர்பான சட்டத்தை உருவாக்குவது தொடர்பான சட்டம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்பட பல்வேறு அம்சங்கலை ஆராய தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசு, குழு ஒன்று அமைத்துள்ளது. மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் கொண்ட இந்த குழுவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி, சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி, சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரி, சமூக நீதி மற்றும் சிறப்பு உதவித்துறை அதிகாரி, உள்துறைத் துறையைச் சேர்ந்த அதிகாரி என ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர். மாநில அரசு கொண்டு வந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றன.