காதல் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் மறுத்ததால் காதல் ஜோடி ஒன்று ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Train

உத்தரப்பிரதேசம் மாநிலம் சீத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திர வர்மா (19), ரஞ்சனா (18) ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை அறிந்த குடும்பத்தினர் அதைக் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க மறுத்தபோது, மனமுடைந்த காதல் ஜோடி கடந்த மே 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.

இதுதொடர்பாக பெண்ணின் வீட்டார் காவல்துறையில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று காலை வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, சீத்தாபூர் அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். ஷாஜகான்பூர் - கோன்டா இடையே செல்லும் பயணிகள் ரயிலின் முன்பாக அவர்கள் குதித்தது தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த இருவரும் இறப்பதற்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.