ADVERTISEMENT

மக்களவைத் தேர்தல்; கூட்டணி குறித்து மாயாவதி உறுதி!

12:32 PM Jan 15, 2024 | mathi23

இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். இந்த இந்தியா கூட்டணியில் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், கடந்த 12 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மாயாவதி, பா.ஜ.க.வை உண்மையாகவே எதிர்ப்பதாக கருதினால், பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சிக்கு மோடியை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை” என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் வறுமையை போக்குவதற்குப் பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கின்றன.

எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் எப்போதும் எங்களுக்கு பலனளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம். இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால் வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்பதில் உறுதியாக இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும். வாய்ப்பு இருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT