Skip to main content

தனியார் வசமாகிறதா எல்.ஐ.சி? பி.எஸ்.என்.எல்_க்கு நேர்ந்த கதி ஏற்படுமா? லட்சக்கணக்கான முகவர்களின் நிலை என்ன?

Published on 14/11/2022 | Edited on 15/11/2022

 

 Is LIC being privatized? What's the status of Lakshadweep agents?

 

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சியை மத்திய பா.ஜ.க. அரசு தனியாரிடம் விற்பனை செய்வதைத் தடுத்து அதைப் பாதுகாக்கக் கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் இந்தியா முழுக்க எல்.ஐ.சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஈரோட்டில் காளைமாட்டு சிலை அருகே 14 ந் தேதி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதற்குத் தலைமை வகித்த கோவை மண்டல எல்ஐசி முகவர்கள் சங்கத் தலைவர் குமணன் நம்மிடம் கூறும்போது, "இந்தியா முழுவதும் 13 லட்சம் முகவர்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மொத்த காப்பீடு வர்த்தகத்தில் எல்ஐசியின் பங்கு மட்டும் 70 சதவீதம் உள்ளது.  எல்ஐசியின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு அதன் முகவர்களான எங்கள் உழைப்புதான் காரணம். 

 

ஆனால் இன்சூரன்ஸ் ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐர்.டி.ஏ), பீமா சுகம் என்ற புதிய கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி, மக்கள் ஆன்லைன் மூலமே காப்பீடு பெறலாம். எல்ஐசி முகவர் இனி எந்த தனியார் நிறுவனத்தின் சார்பாகவும் பணியாற்றலாம். இதன் மூலம் ஒரு முகவரிடம் பாலிசி பெற்று பிறகு வேறு முகவரிடம் சேவை பெறலாம் என்பன போன்ற பல்வேறு கொள்கைகளை இந்த ஆணையம் வகுத்துள்ளது. 

 

தற்பொழுது பாலிசிதாரர்களுக்கு முகவர்கள் சிறப்பான சேவை புரிந்து வருகின்றனர். உதாரணத்திற்கு இறப்பு ஏற்படும்போது அலுவலகத்தை அணுகி இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருகின்றனர். ஆன்லைன் மூலம் பாலிசி பெற்ற பெரும்பாலானோர் உரிய சேவை பெற முடியாது. எல்ஐசி முகவர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்தால் அந்நிறுவனங்கள் முகவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை கொடுக்கும். ஆனால், நாளடைவில் எல்ஐசியின் வர்த்தகம் குறையும். எனவே இந்த பீமா சுகம் என்ற கொள்கை எல்ஐசிஐ நசுக்கவே பயன்படும். எவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது தனியார் நிறுவனங்களின் தாக்கத்தாலும் அரசின் ஒத்துழைப்பின்மையாலும் நலிவுற்றுள்ளதோ அதுபோல எல்ஐசியும் எதிர்காலத்தில் நலிவுறும். 

 

அதனால் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். எல்ஐசி மூலம் நாட்டின் வளர்ச்சிக்குக் கிடைக்கும் நிதி முழுமையாகப் பாதிக்கப்படும். எனவே மத்திய பா.ஜ.க. அரசு அந்தக் கொள்கையை உடனே வாபஸ் பெற வேண்டும் என்பதை  வலியுறுத்தியே  வருகிற 30ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஆர்.டி.ஏ. அலுவலகம் முன்பு எங்களது முகவர்கள் சங்கம் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். 

 

இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  543 எம்பிகளுக்கும் இவை சம்பந்தமாக விரிவான கடிதம் கொடுத்துள்ளோம். வரும் 16ஆம் தேதி முதல் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி கொடுத்துள்ளார்கள்.

 

ஏற்கனவே எல்ஐசி யின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டன. இரண்டு லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றார்கள் அதையும் குறைத்து ரூபாய் 20 ஆயிரம் கோடிக்குப் பங்குகளை விற்றார்கள். முதலில் ஒரு பங்கு ரூபாய் 5000 என்றார்கள் பிறகு ரூபாய் 940 க்கு விற்றார்கள். அந்த பங்கின் மதிப்பு தற்போது வெகுவாக சரிந்து ரூபாய் 600 என்ற நிலையில் உள்ளது. எல்.ஐ.சி. யில் ப்ரீமியம் மீது கூட நாலரை சதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பாலிசிதாரர்கள் கடன் வாங்கினால் ஒன்பது சதவீதம் வட்டி. அந்த வட்டியின் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இவை எல்லாம் பாலிசிதாரர்களான பொதுமக்களை  நேரடியாக பாதிக்கிறது கடந்த மாதம் 20ஆம் தேதி பீமா சுகம் கொள்கையை அரசு அமலாக்கத் திட்டமிட்டது. எங்கள் போராட்டம் காரணமாக அதை ஒத்தி வைத்துள்ளார்கள். பாலிசிதாரர்களின் நலன் கருதி நிரந்தரமாக அக்கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அதானி குழுமத்தில் செய்த முதலீடு 77 ஆயிரம் கோடி அல்ல” - எல்ஐசி விளக்கம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

LIC explains about Adani Group investments

 

அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. இதில் எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது எல்ஐசி அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

 

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டிய தகவல்கள் அனைத்தும் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருந்தது.  

 

அந்த ஆய்வறிக்கையில், பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக்காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச்செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 4.20 லட்சம் கோடி இழப்பை சந்தித்தன. 

 

இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்திருந்தது என்றும், அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி 77 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது என்றும் அதானி குழுமப் பிரச்சனையால் எல்.ஐ.சி 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினைச் சந்தித்துள்ளது எனவும் கூறப்பட்டது. அதேபோல் எஸ்பிஐ, இந்தியன் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்து இருந்தன. இவையனைத்தும் மக்கள் பணம். இதனால் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரும் என பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

 

இந்நிலையில், இது குறித்து எல்.ஐ.சி விளக்கமளித்துள்ளது. அதில், அதானி குழுமத்தில் தாங்கள் முதலீடு செய்தது அனைத்தும் உரிய தரமதிப்பீடுகள் கொண்டவை. அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் 36 ஆயிரத்து 474 கோடி ரூபாய். ஜனவரி 27 ஆம் தேதி வரை அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 56 ஆயிரத்து 142 கோடி ரூபாய். எல்.ஐ.சி நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 41.66 லட்சம் கோடி. தவறான தகவல்களைப் பரவுவதால் முதலீட்டு விவரங்களைப் பகிர்கிறோம் என எல்.ஐ.சி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் எல்.ஐ.சி கூறியுள்ளது.

 

 

 

Next Story

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெற்றி; 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன! 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022


 

LIC wins IPO; 3 times the applications piled up!

 

பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலாக களமிறங்கிய எல்.ஐ.சி நிறுவனத்திற்கு பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியீட்டு அளவை விட 2.95 மடங்கு அதிகமாக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 

 

இந்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்.ஐ.சி) பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கொள்கை முடிவில் இருந்து இந்திய அரசு பின்வாங்கவில்லை. 

 

எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட இந்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ), என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ சந்தைகளில் மே 4- ஆம் தேதி தொடங்கியது.  

 

ரஷ்யா - உக்ரைன் போர், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசுக்கும் இந்த வெளியீடு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பால் மத்திய அரசு உற்சாகம் அடைந்துள்ளது. முதல்கட்டமாக 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளைத் திரட்ட ஐபிஓ பங்குகளை வெளியிட்டுள்ளது. 

 

பங்குகள் கோரி விண்ணப்பிக்கும் அவகாசம் மே 4- ஆம் தேதி தொடங்கி மே 9- ஆம் தேதி முடிவடைந்தது. பங்கு முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே எல்ஐசி பங்குகள் மீது ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த 6 நாள்களில் மொத்தம் 43933.50 கோடி ரூபாய்க்கு பங்குகள் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அதாவது வெளியீட்டு அளவை விட இது 2.95 மடங்கு அதிகம் ஆகும். 

 

பொதுப்பங்கு வெளியீட்டில் மொத்தம் 16.20 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முதலீட்டாளர்களிடம் இருந்து 47.82 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீட்டு விலையைக் காட்டிலும் 60 ரூபாய் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது. அதனால் பாலிசிதாரர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்துள்ளனர். பாலிசிதாரர்களிடம் இருந்து மட்டும் 6.12 மடங்கு வரை, அதாவது 12,034 கோடி ரூபாய்க்கு பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

 

''இந்தியாவின் மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த பாலிசிதாரர்கள் அதிகளவில் எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். இதுபோன்ற சிறு நகரங்களில் எல்ஐசி முகவர்கள், பாலிசிதாரர்களுடன் ஆழமான உறவு வைத்திருப்பதையே காட்டுகிறது,'' என்கிறார் ஃபன்ட்ஸ் இண்டியா நிறுவனத்தின் சிஇஓ கிரிராஜன் முருகன். 

 

சில்லறை முதலீட்டாளர்கள் தரப்பில் இருந்து 12,456 கோடி ரூபாய்க்கு பங்குகள் கோரி விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 1.99 மடங்கிற்குக் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

 

சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு பொதுப்பங்கு வெளியீட்டு விலையில் இருந்து 45 ரூபாய் தள்ளுபடி சலுகை அளித்து உள்ளது. எல்ஐசி ஊழியர்கள் ஒருபுறம் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினாலும் கூட, மறுபுறம் ஒதுக்கீட்டு அளவைக் காட்டிலும் 4.4 மடங்கு பங்குகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 

 

பங்குத்தாரருக்கு முதலீட்டாளர்களிடம் (கியூஐபி) இருந்து 2.83 மடங்கும், அமைப்பு ரீதியற்ற நிறுவன முதலீட்டாளர்களிடம் (என்ஐஐ) இருந்து 2.91 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, அவர்களிடம் இருந்து முறையே 10,635 கோடி ரூபாய்க்கும், 8,180 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 

 

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 902 - 949 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் அதிகபட்ச விலையில் (949 ரூபாய்) பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 

பங்கு ஒதுக்கீட்டுப் பணிகள் மே 12- ஆம் தேதி மேற்கொள்ளப்படும். ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு அவர்களின் முதலீட்டுத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு எத்தனை லாட் பங்குகள் ஒதுக்கப்பட்டன என்பது மே 16- ஆம் தேதி தெரிய வரும். மே 17- ஆம் தேதியன்று, எல்ஐசி ஐபிஓ, மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது.