Skip to main content

எல்.ஐ.சி. பங்குக்கு 60 லட்சம் சில்லறை முதலீட்டாளர்கள் விண்ணப்பம்! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

LIC 60 lakh retail investors apply for shares!

 

எல்.ஐ.சி. பொதுப்பங்கு விற்பனையில் பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் இதுவரை இல்லாத அளவாக 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்று 21,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பங்கு விற்பனை கடந்த மே 4- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், இன்று (09/05/2022) மாலை 04.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில், நேற்று (08/05/2022) வரை சில்லறை முதலீட்டாளர்கள் சுமார் 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

 

முன்னதாக, கடந்த 2008- ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பொதுப்பங்கு விற்பனையின் போது, 40 லட்சத்து 80 ஆயிரம் சிறு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எல்.ஐ.சி. பங்குகளுக்கு சில்லறை விற்பனை பிரிவில் 1.53 மடங்கும், ஊழியர்கள் பிரிவில் 3.7 மடங்கும், அதிகமாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. 

 

ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு 45 ரூபாய் தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் தள்ளுபடியும் அறிவித்திருப்பதும் காரணமாக, கூறப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய புதிய பங்கு வெளியீடு என்ற பெருமையை எல்.ஐ.சி. பெற்றுள்ள நிலையில், தற்போது அதிக விண்ணப்பங்களிலும் சாதனை படைத்துள்ளது 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க சிறப்பு குழு; தமிழக அரசு அறிவிப்பு

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Tamil Nadu Government Notification Special Committee to Monitor Business Start-ups

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6.44 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி (27.01.2024) அரசு முறை பயணம் மேற்கொண்டார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதனையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான இந்தக் குழுவில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

பைஜூஸ் நிறுவனரை நீக்க பங்குதாரர்களின் வாக்குப்பதிவு; நிராகரித்த நிர்வாகம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Shareholders vote to remove ByJu's founder but Rejected administration

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன் (44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்த செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி கற்க பலர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், பைஜூஸுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடன் சுமை, ஊழியர்களின் பணி நீக்கம், வருவாய் இழப்பு, அடுத்தடுத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என கடும் பின்னடைவை பைஜூஸ் சந்தித்தது. 

இதனால், பைஜூஸில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்து, தங்கள் பணத்தை திரும்ப பெற்று வந்தனர். இதன் காரணமாக, இந்த நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலவாணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரவீந்திரன் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அந்நிய செலவாணி மேம்பாட்டு சட்டத்தின்படி, சுமார் ரூ.9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரவீந்திரன் மீது குற்றம்சாட்டியது.

அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருவதை அடுத்து, ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை உயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பைஜூஸ் பங்குதாரர்கள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், EGM எனப்படும் பைஜூஸ் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (23-02-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே இந்த கூட்டத்தில், நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள், பொறுப்பற்ற நிர்வாகம் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பதவியில் நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இதே வேளையில், EGM கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களையும்ம் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று பைஜூஸ் நிர்வாகம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், EGM கூட்டத்தை நடத்தலாம், ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மார்ச் 13ஆம் தேதி வரை அமலுக்கு வராது என தெரிவித்துள்ளது.